பாலக்கீரை சாதம் ஒரு வித்தியாசமான, மிகவும் சுவையான மற்றும் சத்தான ஒரு உணவு ஆகும். இவை கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்க்குள் தயார் செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
சமீப காலங்களாகவே நமது பயணம் ஆரோக்கியமான உணவுகளை தேடி செல்ல துவங்கி இருக்கிறது. நம்மில் பல பேர் இது போன்ற சத்தான உணவுகளை தேடி பட்டியலிட தொடங்கியிருக்கிறோம். நாம் வழக்கமாக நம் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கும் மதிய உணவுகளுக்கு இவை ஒரு நல்ல மாற்றாகவும் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலக்கீரை சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பாலக்கீரை சாதத்தின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
பாலக்கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் இதை நாம் பாலக்கீரை குழம்பாகவோ அல்லது பொறியலாகவோ செய்து கொடுத்தால் நம் பிள்ளைகள் அலறி அடித்து ஓடி விடுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை இப்படி பாலக்கீரை சாதமாக செய்து கொடுத்தால் அவர்கள் அதை மிகவும் விரும்பி உண்பார்கள். அவர்களாகவே இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை. இதை கட்டாயம் நீங்கள் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
பாலக்கீரை சாதம் செய்ய நாம் முதலில் பாலக்கீரை, பூண்டு, இஞ்சி, மற்றும் பச்சை மிளகாயை கொண்டு ஸ்பெஷலான மசாலா கலவையை தயார் செய்வோம். இந்த மசாலா கலவை நாம் சேர்க்கும் வேகவைத்த பாசுமதி அரிசி, வறுத்த முந்திரிப் பருப்பு, வேர்கடலை, சீரகம், கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மற்றும் பிரியாணி இலையோடு நன்கு ஒன்றோடு ஒன்று வெந்து மிக அற்புதமான மணம் மற்றும் சுவையை கொடுக்கும்.
சில குறிப்புகள்:
பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.
இவ் உணவின் வரலாறு:
பாலக்கீரை சாதம் எந்த நாட்டில் உதயமானது என்பதற்கான தெளிவான தரவுகள் ஏதுமில்லை. எனினும் கீரை வகைகள் பர்ஷ்யாவில் (சமகால ஈரான்) உதயமானதாகவும் முகலாய படையெடுப்பின்போது அவை இந்தியாவிற்க்கு அறிமுகம் ஆனதாகவும் வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். பாலக்கீரை சாதம் கிரேக்கத்தில் உருவாகி இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இன்றைக்கும் கிரீஸ் நாட்டில் ‘Spanakorizo’ என்று அழைக்கப்படும் பாலக்கீரை மற்றும் சாதம் கொண்டு செய்யப்படும் உணவு மிகவும் பிரபலமாக இருக்கிறது.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
பாலக்கீரை சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.
இதை சமைக்க சுமார் 35 லிருந்து 40 நிமிடம் எடுக்கும்.
பாலக்கீரை சாதத்தை முழுமையாக சுமார் 50 நிமிடத்தில் இருந்து 55 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
பாலக்கீரை சாதத்தை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ஒரு நாள் வரை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.
இதை ஒற்றிய உணவுகள்:
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
பாலக்கீரை சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.
நாம் இதில் சேர்க்கும் பாலக்கீரையில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்த அழுத்தத்தை குறைக்க, மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீஸ், விட்டமின் Okay மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நாம் இதில் பயன்படுத்தும் வேர்க்கடலையில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இதய ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்புக்கான டயட்டில் மிகவும் உதவியாக இருக்கும்.
இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பாலக்கீரை சாதம்
பாலக்கீரை சாதம் ஒரு வித்தியாசமான, மிகவும் சுவையான மற்றும் சத்தான ஒரு உணவு ஆகும். இவை கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்க்குள் தயார் செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
தேவையான பொருட்கள்
- 1 cup பாசுமதி அரிசி
- 1 கட்டு பாலக்கீரை
- 2 வெங்காயம்
- 4 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- 1 சிறு துண்டு இஞ்சி
- 1/4 tsp மஞ்சள் தூள்
- 1 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
- 1/2 tsp சீரகம்
- 3 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 இலவங்கப்பட்டை
- 1 பிரியாணி இலை
- 1/2 tsp கரம் மசாலா
- 15 முந்திரிப் பருப்பு
- 1 கை வறுத்த வேர்க்கடலை
- 1/2 tsp எலுமிச்சம்பழ சாறு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
-
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
-
அடுத்து பாலக்கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை நறுக்கி மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
-
இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
-
எண்ணெய் சுட்டதும் அதில் முந்திரிப் பருப்புகளை போட்டு அது பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
-
பின்பு அதில் வேர்க்கடலைகளை போட்டு அது சற்று நிறம் மாறும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
-
அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
-
தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
-
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாலக்கீரை, பூண்டு, இஞ்சி, மற்றும் இரண்டு பச்சை மிளகாயை போட்டு அதில் சுமார் பத்து மேஜைகரண்டி அளவு தண்ணீரை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
-
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
-
நெய் சுட்டதும் அதில் சீரகம், கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
-
அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாயை சேர்த்து அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.
-
ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
-
பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை சுமார் 10 நிமிடம் வரை வதக்கவும்.
-
பத்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
-
அடுத்து அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அரிசி உடைந்து விடாமல் அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக கிளறி விடவும்.
-
அடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
பாலக்கீரை சாதத்திற்க்கு உகந்த சைடிஷ்கள் என்னென்ன?
சேப்பக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு பொரியல், எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் போன்றவை படுக்கச்சிதமாக இருக்கும். உருளைக்கிழங்கு அல்லது நேந்திரம் சிப்ஸை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாலக்கீரை சாதம் செய்வதற்க்கு நாம் கண்டிப்பாக பாசுமதி அரிசியை தான் உபயோகிக்க வேண்டுமா?
அப்படியெல்லாம் ஏதுமில்லை. நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியை கொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் அதையே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாலக்கீரை சாதத்தில் நாம் ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?
உங்களுக்கு விருப்பம் என்றால் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாலக்கீரை சாதத்தை கூடுதல் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?
உங்களுக்கு காரம் அதிகம் வேண்டுமென்றால் நீங்கள் கூடுதலாக உங்கள் காரத்திற்க்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக அரை மேஜைகரண்டியில் இருந்து ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாலக்கீரை சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் பாலக்கீரையுடன் புதினாவையும் சேர்த்துக் கொள்ளலாமா?
உங்களுக்கு விருப்பம் என்றால் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். எனினும் சுமார் ஒரு கை அளவு மட்டுமே பயன்படுத்துங்கள். அதிகமாக சேர்த்தால் புதினாவின் சுவை டாமினேட் செய்துவிடும்.